Saturday, 17 February 2018

சொல் 'செயல்' - சிவகார்த்திகேயனுக்கு சாத்தியமானது எப்படி


உலகில் தலைசிறந்த சொல் 'செயல்' - சிவகார்த்திகேயனுக்கு சாத்தியமானது எப்படி? #HBDSivakarthikeyan

75 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகம் பல்வேறு விதமான கலைஞர்களைச் சந்தித்து வருகிறது. நடிகர் திலகம், புரட்சித் தலைவர் என்று ஒரு காலத்தில் மக்கள் மனதில் கம்பீரமாக நின்று தங்கள் கலைப் பயணத்தை மேற்கொண்ட காலத்திற்குப் பிறகு, அடுத்த தலைமுறையினர் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி, நம் தமிழ்த் திரையுலகை வேற லெவலுக்கு அழைத்துச் சென்ற பெருமை ரஜினிகாந்துக்கும், கமல்ஹாசனுக்கும் உண்டு. அவர்களுக்குப் பிறகு, தமிழ் சினிமா யாரை நம்பி இயங்கப்போகிறது என்ற கேள்விக்குப் பதிலாய் தனக்கென்று ஒரு ஸ்டைலை வகுத்துக்கொண்டு களமிறங்கினார்கள் விஜயும், அஜித்தும்.
இந்தத் தலைமுறையினரின் சிம்மசொப்பனமாக விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என ஒரு பட்டாளமே இயங்கி வந்தாலும், அடுத்த தலைமுறையினரின் 'மாஸ் ஸ்டார்' யார் என்ற கேள்விக்குப் பதில், சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதிதான்! ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா... எனப் பல முன்னணி நடிகர்களைப் பார்த்து வளர்ந்த இவர்கள்தாம், ஜென் Z-ன் 'ஃபர்ஸ்ட் சாய்ஸ்' நடிகர்கள். இந்த இருவரில் ஒருவரான, சிவகார்த்திகேயனுக்கு, இன்று பிறந்தநாள்!. இந்த பர்த்டே பேபியின் வளர்ச்சியைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்யலாமா?
விஜய் டிவி-யில் 'கலக்கப்போவது யாரு` நிகழ்ச்சி வந்தபிறகு யாராலும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அதில் பங்கேற்பவர்களின் திறமைகள் இருந்தது, இருந்தும் வருகிறது. அதில், ஒரு சாதாரண பங்கேற்பாளராகத் தோன்றி, இன்று தமிழ்த் திரையுலகில் தவிர்க்கமுடியாத நாயகனாய் வலம் வந்துகொண்டிருக்கிறார், சிவகார்த்திகேயன். விஜய் டிவி-யில் இவர் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் இவர் வாழ்வைச் செதுக்கியது. பிறகு, தன் முயற்சியாலும் கடின உழைப்பினாலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளர் ஆனார். இவர் பேச்சுக்கும், இடையிடையே கொடுக்கும் காமெடி கவுன்ட்டர்களுக்கு ரசிகர்கள் உருவானார்கள். பட்டி தொட்டி எங்கும், 'தொகுப்பாளர்' சிவகார்த்திகேயனின் மாடுலேஷனுக்கு லைக்ஸ் குவிந்தது. அந்நிகழ்ச்சியில் இவரது செயல்பாடுகள், 'சிரிச்சாப் போச்சு' சுற்றில் வரும் கலைஞர்களுடன் சேர்ந்து இவர் செய்த அட்ராசிட்டிகளுக்கு இன்னும் யூ-டியூபில் ரிப்பீட் ஆடியன்ஸ் இருக்கிறார்கள்.
தன் திறமையை, திரைக்கு வரும் முன்பே மக்களுக்கு உணர்த்தி ஸ்டாராக ஜொலித்தவர். இவரது செயல்பாடுகளையும் திறமையையும் பார்த்து இயக்குநர் பாண்டிராஜ் 'மெரினா'வில் வாய்ப்பு கொடுத்தார். கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தத் தொடங்கிய சிவா, இன்றுவரை தனக்கு வரும் வாய்ப்பினை கச்சிதமாகப் பயன்படுத்தி, தன்னை மெருகேற்றி, தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்.

இவரின் முதல் படமான 'மெரினா'வில் செந்தில்நாதனாக இவரது யதார்த்த நடிப்பு அன்று பரவலாகப் பேசப்பட்டது. படத்தில், 'பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்' என்ற எஸ்.எம்.எஸ் படித்து, ஓவியாவை வெறுப்பேற்றி, அவரிடம் 'லைட்டா பசிக்குதா சொப்பனசுந்தரி?' எனக் கேட்ட இவரது காதல் வசனம், காதல் ஜோடிகளுக்குப் பிடித்தமானது. 'சினிமாவில் நடிச்சாச்சு' என்றில்லாமல், முதல் படத்தை முடித்த கையோடு பல நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக தன் பயணத்தைத் தொடர்ந்தது பாராட்டக்கூடிய ஒன்று. 'மெரினா' வெளியான சில மாதங்களில் தனுஷுடன் இணைந்து நடித்த '3' இவரை மேலும் ஒரு படி ஏறச்செய்தது. குமரனாக இவரது தோற்றம் இவரைத் தவிர யாருக்கும் பொருந்திருக்காது என்று பல விமர்சனங்களும் பாரட்டுகளும் குவிந்தன. 'சொல்லு நீ லவ் யூ' என்று தனுஷுடன் சேர்ந்து ஸ்கூல் யூனிஃபார்மில் இவரது ஆடிய டான்ஸூக்கு ஆடியன்ஸ் அதிகம். அதிலும், 'நானெல்லாம் ஸ்கூலுக்கு வர்றதே பெருசுடா.. என்னைப் போய் டியூசனுக்கெல்லாம் வரச் சொல்றியேடா` என்ற டயலாக் 'கடைசி பெஞ்ச் கார்த்தி' ரகங்களின் ஆல் டைம் ஃபேவரைட்.

No comments:

Post a Comment