
அதே வருடத்தில் 'மனம் கொத்திப் பறவை'யில் மீண்டும் ஹீரோவாக தன் முத்திரையைப் பதித்து வெகுஜனங்களின் பார்வையை இவர் பக்கம் திரும்பச்செய்தார். இதில் வரும் கண்ணன் (சிவா), சூரி, சிங்கம்புலி என நகைச்சுவை நடிகர்களோடு நடித்த விதம், 'என்ன சொல்ல ஏது சொல்ல...' என ஆத்மியாவுடன் பாடிய டூயட், அந்தத் தருணத்தில் பலர் உதடுகளில் உச்சரித்த பாடல் வரிகள். இந்தப் படத்தின் மூலம் இவரது க்ராஃப்ட் அடுத்த படி ஏறியது. அடுத்ததாக 'கேடிபில்லா கில்லாடிரங்கா' படத்தில் விமலுடன் கைகோர்த்த இந்தப் பட்டை முருகன், பட்டையைக் கிளப்பினார். ஜெராக்ஸ் கடை 'பாப்பா'வின் பேச்சிற்கு, 'பட்டை முருகா... இப்படித்தான் பல பசங்களைக் குழியில தள்ளப்பாப்பாய்ங்க, லைக் பண்ணாத அன்லைக் பண்ணு' என்ற இவரது மைண்ட் வாய்ஸ், பல இளைஞர்களின் ஓபன் கமென்ட். விமலுடனும் சூரியுடனும் நடிப்பில் கில்லாடி ரங்காவாகத் தன்னை நிரூபித்தார் சிவகார்த்திகேயன்.
அடுத்து நடித்த 'எதிர்நீச்சல்' அனைவராலும் பேசப்பட்டது. 'குஞ்சிதபாதம்' என்ற தன் பெயருக்காக ஓடிய மாரத்தான், இளைஞர்களை ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற மோடிவேஷனுக்கான திரி. படத்தில் இடம்பெற்ற 'ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்...' என்ற பாடலின் மூலம், தான் ஒரு ஹீரோ மெட்டீரியல் என்பதை உணர்த்தினார், சிவா. இவர் போட்ட எதிர்நீச்சலுக்குக் கிடைத்தது அடுத்த 'போஸ் பாண்டி' வாய்ப்பு. கிராமத்து இளைஞனாக இவரது அணுகுமுறை தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம மக்களின் மனதிலும் நாற்காலி போட்டு உட்கார வைத்தது. 'வருத்தப்படாத வாலிபர் சங்க' தலைவராக இவர் நடிப்பிலும், டயலாக் டெலிவரியிலும் மாஸ் காட்டி அதிரவைத்தார். சிவனாண்டி மாமனாரிடம் சீண்டி, லதா பாண்டியைக் காதலித்த இவரின் 'பாக்காதே... பாக்காதே...' பாடலைக் கேட்காத ஆட்களே இல்லை. இவர் கூறிய, 'பட்டப் பகலிலே, பங்குனி வெயிலிலே எனைப் பார்த்துச் சிரிக்கும் நிலா!' வசனம் ஒன்சைடு காதலர்களின் ஒரே சாய்ஸ். இதே படத்தில் இடம்பெற்ற 'ஊதா கலரு ரிப்பனி'ன் சாயல் இன்னும் போகவில்லை.
இந்தப் படத்தின் வெற்றி இவருக்குத் தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்களை உருவாக்கியது என்றே சொல்லலாம். ஆகவே, 'மான் கராத்தே' படத்தின் டிரெய்லர் வெளிவந்த உடனே கொண்டாடித் தீர்த்தார்கள் சிவாவின் விழுதுகள். சிட்டி பையனாக இருந்த சிவாவின் நடனம் இந்தப் படத்தில் அடி தூள்ள்ள்... ராயபுரம் பீட்டராக இருந்த சிவா பாக்ஸர் பீட்டராகத் திரையரங்கில் தோன்றும்போது, வந்த விசில் சத்தமும், கைதட்டலும் கணக்கில் அடங்காதவை. முதல் முறையாக முன்னணி கதாநாயகி ஹன்சிகாவுடன் நடித்தபோது இவர் கையாண்ட விதம்தான், சிவாவின் கூடுதல் பலம். 'மான் கராத்தே' சிவாவின் சோலோ ஸ்டில், பல சிவகார்த்திகேயன் ரசிகர்களின் பீரோக்களை அலங்கரித்திருக்கிறது.
ஒரு பேட்டியில், 'அடுத்த படத்துல போலீஸ் கேரக்டர் பண்ணனும்னு சொல்லியிருக்கார் இயக்குநர்' என்று சொன்ன சிவா கேஷூவலாக 'ஐ எம் ஸோ கூல்' என்று படத்தை வெற்றிகரமாக முடித்து ரசிகர்களின் மத்தியில் மதிமாறனாக மணிமகுடம் சூட்டிக்கொண்டார். சிவாவின் அடுத்த படம் என்ன? கேள்வி பலர் மனதில் எழ, பல தடைகளைத் தாண்டி திரையைத் தொட்டது, 'ரஜினி முருகன்'. 'ஜிகிரு ஜிகிரு ஜிகிரே...' பாடலில் சிவாவின் குத்தாட்டத்திற்கு அரங்கம் அதிர, 'உன்மேல ஒரு கண்ணு' பாடல் காதலில் திளைக்க வைத்தது. 'நம்பி வாங்க... சந்தோசமா போங்க...' எனப் படத்திலும் நிஜத்திலும் சொல்லியவர்தான், இந்த எஸ்.கே!
பிறகு வந்த 'ரெமோ' சிஸ்டர், நம் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். சிவா - சதீஷின் காமெடி கெமிஸ்ட்ரி வழக்கம்போல மார்க் அள்ளியது. 'வாடி என் தமிழ்செல்வி` என்று இவர் ஆடிய ஆட்டத்திற்கு மயங்காத ஆட்கள் இல்லை. ஒரு ஹீரோவாக தன்னை முழுமையாக உணர்ந்து, நடனத்தில் இவரது கடின உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி அது.
No comments:
Post a Comment